
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முந்தினம் (25.03.2025) டெல்லி சென்றிருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு பேசுபொருளாகி இருக்கும் நிலையில் நெல்லை சென்றுவிட்டு திரும்பிய எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழக பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்து மனு அளித்தேன். கோவிலாக கருதும் அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஒ.பன்னீர்செல்வம் எனவே பிரிந்தது பிரிந்த்துதான். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. கூட்டணி அமைக்கும் பொழுது செய்தியாளர்களை அழைத்து தெரிவிப்போம்.
தேர்தல் நெருங்கும் பொழுது கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிச்சயம் நடைபெறும். அதிமுகவை பொறுத்தவரை திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல. தேர்தல் நேரத்தில் யார் யாரெல்லாம் ஒத்த கருத்துடைய காட்சிகளோ எங்களுடன் எல்லாம் சேர்த்துக் கொள்வோம். தேர்தலுக்கு இன்னும் 11 மாதம் இருக்கிறது. இன்று தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என அத்தனை பேருக்கும் தெரியும். பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்ற செய்தி தொலைக்காட்சிகளில் வருகிறது. அவ்வளவு மோசமாக திமுக ஆட்சி இருக்கிறது'' என்றார்.