Skip to main content

கமல்ஹாசன் நேரில் ஆஜராக அவசியமில்லை! -இந்தியன் 2 விபத்து வழக்கில் உத்தரவு!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

இந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக,  நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்தில் விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நாளை  ஈவிபி பிலிம் சிட்டியில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி, சம்பவம் நடந்தது குறித்து நடித்துக்காட்ட வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு,  நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

 

No need to visit Kamal Haasan! Indian-2 case ordered!

 

ஏற்கனவே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் கமல்ஹாசன் தரப்பில், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைக்கு 3 மணி நேரம் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், அவர் அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும், சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்கு விசாரணைக்குச் செல்ல இயலாது எனவும், இது விபத்து வழக்கு; கொலை வழக்கு அல்ல என்றும் வாதம் வைத்தனர்.  

அரசுத்தரப்பில், விபத்து நடந்த போது நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். கமல்ஹாசன் மட்டுமல்லாமல், இந்தியன் 2 படத்தின் இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 23 பேருக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் என்பதற்காக புலன்விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என வாதம் வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் நாளை ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், புலன்விசாரணைக்குப் பின்னர் தேவைப்படும் பட்சத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என நடிகர் கமல்ஹாசனுக்கு  அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்