Skip to main content

ஜல்லிக்கட்டு போல் தேனியில் பன்றி பிடிக்கும் போட்டி!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள குறமகள் வள்ளிநகர் குடியிருப்புப் பகுதியில் நேற்று (18.01.2021) பன்றி தழுவும் விழாவை நடத்தியுள்ளனர். வனவேங்கைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தி வரும் நிலையில், தேனி நகர் பகுதியில் பன்றி தழுவும் போட்டி நடத்தப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த பன்றி தழுவும் போட்டி பற்றி மேலும் விவரங்கள் அறிய வனவேங்கைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உலகநாதனிடம் கேட்ட போது, “விவசாயத்தில் உழவிற்கு காளை மாடுகள் பயன்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சங்ககால குறிஞ்சி நிலத்தில் விவசாய உழவிற்குப் பன்றிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஆதாரம் புறநானூற்றில் பாடான் திணையில் உள்ளது.

 

இதனை மையமாக வைத்துதான் பன்றி தழுவும் போட்டியை நடத்த திட்டமிட்டோம். ஜல்லிக்கட்டுப் போட்டி போலவே, இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிகளும் உள்ளன. சுமார் 70 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஆரம்பக்கோட்டில் இருந்து அவிழ்த்துவிடப்படும் பன்றிகள் மூன்று அடி தொலைவில் போடப்பட்டுள்ள கோட்டைக் கடந்த பின்னர், அங்கிருக்கும் மூவர், பன்றியைப் பிடிக்க முயற்சிப்பார்கள். 

 

அதில் ஒருவர் மட்டுமே பன்றியைப் பிடிக்க வேண்டும். அதாவது பன்றி எல்லைக்கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்காலை மட்டுமே பிடிக்க வேண்டும். சுமார் 80 கிலோவிற்கு மேல் இருக்கும் பன்றியின் பின்னங்காலைப் பிடித்தால், நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்லும். அதனையும் மீறி பன்றியைப் பிடித்து நிறுத்த வேண்டும். இது சவாலாக இருக்கும். 

 

மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து பன்றிகள் களமிறக்கப்பட்டன. வெற்றிபெற்ற பன்றிகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகள் கொடுத்தோம். சங்ககால குறிஞ்சி நில மக்களின் நினைவாக, இந்தப் போட்டிகள் நடந்தது. இது நம் பாரம்பரியத்தைப் போற்றும் நிகழ்வாக நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்