கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை அருகே வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிப் 17 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் பணியைத் தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பா.ம.க. நிறுவன ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், வள்ளலாரின் சத்திய ஞான சபையில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதைக் கைவிட்டு அவர் பிறந்த ஊரான மருதூர், அவர் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி, சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்ட இடம் அல்லது கடலூர்-விருத்தாச்சலம் சாலை, கும்பகோணம் - பண்ருட்டி சாலையில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து பன்னாட்டு மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் பணியைக் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி சத்திய ஞான சபையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். இவருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை சேர்மன் சுப்பராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சேர்மன் கோகிலா குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் வடலூர் பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் வந்தனர். இவர்களை கடலூர் மாவட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அதே இடத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “வள்ளலாரை அரசியல் ஆக்காதீர்கள். வள்ளலார் சத்திய ஞான சபை அருகே 77 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 4 சதவீதமான 3 ஏக்கர் இடத்தில் மட்டுமே சர்வதேச மையம் கட்டப்படுகிறது. எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாலையோரத்தில் இது அமைகிறது.
கடந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் சாதுக்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகே இந்த பணிகள் நடைபெறுகிறது. அப்போது இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழக அரசு பல்வேறு பொருளாதார நெருக்கடியிலும் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தற்போது பா.ம.க. உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசியலாக்குகிறார்கள்.
உலக நாடுகளில் இருந்து வள்ளலாரை காண வருபவர்கள் தியானம் செய்ய மண்டபம், கலையரங்கம், மின் நூலகம், முதியோர் இல்லம், கழிவறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சுவர், வெளிநாட்டு மாணவர்கள் தங்கி ஆய்வு செய்ய ஆய்வகம், அணுகு சாலை வசதி உட்பட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. மக்களுக்காகத் தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். விமர்சிப்பவர்கள் சொல்லும்படி ஆட்சி நடத்த தேவையில்லை. எவ்வளவு தடை வந்தாலும் சர்வதேச மையம் அமைக்கப்படும். எனவே அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வள்ளலாரை அரசியலாக்க வேண்டாம். வள்ளலார் புகழ் உலகெங்கும் பரவுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.