நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில், பொள்ளாச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் அதிமுக சார்பில் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசுகையில், ''அண்ணா திமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரத்தை எத்தனையோ ரூபத்தில் எடுத்துப் பார்த்தார். அத்தனையும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் துணையோடு தூள் தூளாக நொறுக்கி எறியப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை உருவாக்கியவர் தெய்வ சக்தி படைத்த எம்ஜிஆர், ஸ்டாலின் அவர்களே.. அதை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இந்த இருபெரும் தலைவர்கள் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை.
அதிமுக இரண்டாகவும் போகவில்லை, மூன்றாகவும் போகவில்லை. ஒன்றாக தான் உள்ளது. எங்களுடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்த கழகத்தை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நாம் அத்தனை பேரும் கூட்டுப் பொறுப்போடு தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக் கொடியை நாட்டுவோம். தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக. இன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் இங்கே வந்து பேசுகிறார்கள் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்கிறார்கள். இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வருவதற்கு காரணம் அதிமுக ஆட்சி தான்.
ஒரு ஆண்டு அல்ல 30 ஆண்டுகள் உழைத்த உழைப்பு. அதனால்தான் தமிழகம் அனைத்து துறைகளிலும் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது. புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஃபிளைட்டில் ஏறும் போது பேட்டி கொடுப்பார்; இறங்கும் போது பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பதுதான் அவரது வேலை. பேட்டி கொடுத்து மக்களை ஈர்க்கப் பார்க்கிறார். பல தலைவர்கள் எப்படி எப்படியோ மக்களை சந்தித்து ஈர்க்கப் பார்ப்பார்கள். ஆனால் இந்தத் தலைவர் டெக்னிக்காக அப்பப்ப பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது ஒன்றும் தமிழ்நாடு மக்களிடத்தில் எடுபடாது. இங்கு உழைக்கின்றவர்களுக்கு தான் மரியாதை'' என்றார்.