Skip to main content

“மேலும் தாமதப்படுத்தக் கூடாது” - புள்ளிவிவரத்துடன் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Published on 19/08/2024 | Edited on 19/08/2024
No further delay Chief Minister's letter to Union Minister with statistics

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் இன்று (19-8-2024) எழுதியுள்ள கடிதத்தில், “2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வேக்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிகிறது. அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு. கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணக்குத் தலைப்பு 15 இரட்டைப் பாதையாக்கல் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

No further delay Chief Minister's letter to Union Minister with statistics

மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாகப் பாதிக்கப்படும். அந்த வகையில், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை - கடலூர்-மகாபலிபுரம், மதுரை - தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை - ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும்.

அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது. தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும். அந்த வகையில், விழுப்புரம் -  திண்டுக்கல், திருவள்ளூர் - அரக்கோணம் (4வது லேன்), ஓமலூர் - மேட்டூர் அணை, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, மதுரை - மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர், காட்பாடி - விழுப்புரம், சேலம் - கரூர் - திண்டுக்கல், ஈரோடு - கரூர், சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3வது மற்றும் 4வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.

No further delay Chief Minister's letter to Union Minister with statistics

மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புகிறேன். குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்