கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியதால், அப்பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மாணவியின் தாயார் செல்வி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது மனுவில், பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கையைத் தர மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் நீதிமன்ற கண்காணிப்பில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவியின் வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகையில் மாணவியின் பெற்றோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்காட சென்ற வழக்கறிஞர் ப.பா.மோகனை சந்தித்து பேசினர். மேலும் மாணவியின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமே விசாரித்து வருவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.