நாமக்கல் அருகே, ரயில்வே துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 23 ஆண்டாக இழப்பீடு வழங்காததால், ரயில்நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம், நெ.3 கொமாரபாளையம் பகுதியில் கடந்த 1999ம் ஆண்டு இருப்புப்பாதை அமைப்பதற்காக, ரயில்வே துறையும், மாநில வருவாய்த்துறையும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் நீதிமன்றம், இழப்பீடு வழங்காமல் காலம் கடத்தி வந்ததால் ராசிபுரம் ரயில் நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியர்களுடன் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஜூன் 16ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம், ராசிபுரம் ரயில் நிலையத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்தவித பொருள்களும் இல்லாததால் ஜப்தி நடவடிக்கைக்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் இழப்பீடு தொகை வழங்க மேலும் சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து அவர்கள் ரயில்நிலையத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். ரயில்வே ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மூன்று முறை நீதிமன்ற உத்தரவுடன் விவசாயிகள் ஜப்தி செய்ய சென்றபோதும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
''வழக்கு விசாரணைக்கு ரயில்வே அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக வருவதில்லை. ஜப்தி நடவடிக்கைக்கு வந்தாலும், ஒத்துழைப்பு தருவதில்லை. எனவே, முறையான பதில் தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம்,'' என விவசாயிகள் கூறினர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் வட்டாட்சியர் அலுவலகம், ரயில்நிலையம் பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.