தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் பிளஸ் டூ பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.