சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், குடியிருப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தனது வீட்டு இடிப்பதைக் கொண்டு மனமுடைந்து தீக்குளித்து முதியவர் கண்ணையா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு இன்று (10/05/2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்; மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடிக்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்; வீடுகளை காலி செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், கடந்த 2011- ஆம் ஆண்டு இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்திருக்கிறீர்கள். ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்த நாங்கள் உத்தரவிடப் போவதில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு நீர்த்துப்போவதை விரும்பவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தைக் காலி செய்ய தேவையான நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது. முதலில் மாற்று இடத்திற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்; கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள். ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் எங்கள் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறியதில் இருந்து அவர் விழிப்புணர்வுடன் இருப்பது தெரிகிறது. எனவே, தேவையான காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.