Skip to main content

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை இல்லை!-உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

No arrest if SV Sehgar apologizes in National Flag contempt case! - Police response in the High Court

 

தேசியக் கொடியை அவமதித்ததற்காக மன்னிப்புக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தால் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார் என சென்னை மாநகர காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15 -ஆம் தேதி ஏற்றப்போகிறாரா என்றும் தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப்போகிறாரா என்கிற ரீதியிலும் பேசி வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது  மத்திய குற்றப்பிரிவினர் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன் ஆஜராகி, கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்னர், காவல்துறை 4 பக்க கேள்விகளைக் கொடுத்து பதிலளிக்க கூறியிருந்தது. அதையுது, ஆணையர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிப்பதிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்புக் கோரினால்,  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஆனால் அந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp


அவற்றைப் பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினால் கைது செய்ய மாட்டோம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது குறித்து, மனுதாரர் முடிவெடுத்து, அவரது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்