Skip to main content

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது! – மத்திய அரசு தகவல்!

Published on 19/08/2020 | Edited on 20/08/2020
No action will be taken on the EIA report! -centra lGovernment Information


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என மத்திய அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை பிறமொழிகளில் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும், மீனவர் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழில் தயாராக இருப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, வரைவு அறிக்கைக்கு பிற உயர்நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.  

 

மேலும்,  டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்