கல்வி கற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்புகளில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச சேர்க்கைக்காக தனியார் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி விடும் என்று அரசு அறிவித்து தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கு கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாததாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சர்வர் உள்ளிட்ட சிறு சிறு குளறுபடிகளாலும், தேர்தல் சமயம் என்பதாலும் விண்ணப்பிக்க முடியாமல் விட்டுவிட்டனர்.
உதாரனமாக கடலூர் மாவட்டத்தில் 368 நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 5,431 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் மொத்தம் 5,087 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதிலும், பல்வேறு காரணங்களால் 330 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதனால், 5,431 இடங்களுக்கு 4,757 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர். அதிலும், சில பிரபல தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே அதிக போட்டி நிலவுகிறது.
மேலும் இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கு மொத்தமுள்ள 5431 இடங்களுக்கு 4757 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மொத்த இடங்களையும் நிரப்ப மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று தமிழக அளவிலும் இந்த பிரச்சணை உள்ளது கூறப்படுகிறது.
இதில் நன்கு கல்வி அறிவு பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பணியாற்றி வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி சான்றிதழை தவறான முறையில் பெற்று கல்வி உரிமை சட்டத்தில் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று கடந்த காலங்களில் விண்ணப்பித்து ஏழை மாணவர்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை தட்டிபறித்து அனைத்து வசதிகளும் உள்ளவர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கிராம புறம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களின் நிலை, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கிராம புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதற்கு எப்படி விண்ணபிப்பது என்று விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவிடுவதாலும் இது போன்று நடக்கிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.