தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று முதல் கோரப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். முதற்கட்டமாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் 21 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடனான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது ஆற்று மணல் கொள்ளை தான். அதைக் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று கடந்த 29.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்திருக்கிறதே தவிர, தமிழக அரசின் மணல் கொள்ளையை அங்கீகரிக்கவில்லை. மேலும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற தீர்ப்புக்குத் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதே தவிர, புதிய குவாரிகளைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையோ, மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலமாகத் தான் தடை விதித்திருக்கிறது என்பதையோ மதிக்காமல் அடுக்கடுக்காக புதிய மணல் குவாரிகளை தமிழக அரசு திறந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பனை செய்ய விடாமலும், செயற்கை மணல் உற்பத்தியைக் குறைத்தும் செயற்கையான மணல் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் மணல் குவாரிகளை திறந்து கோடிகளை குவிக்க வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம் ஆகும். மக்கள் நலனையும், சுற்றுச்சூழலையும் விரும்புபவர்களால் இதை அனுமதிக்க முடியாது.
எனவே, தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதுடன், ஏற்கனவே உள்ள மணல் குவாரிகளையும் மே மாதத்திற்குள் மூட வேண்டும். இல்லாவிட்டால் புதிய மணல் குவாரிகளின் முன்பாக மக்களைத் திரட்டி நானே முன்நின்று தொடர் போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.