தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பெய்த இடைவிடாத கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை விரைவில் வெளியேற்றும் மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், என்.எல்.சி இந்தியா நிறுவனம், 5 சக்தி வாய்ந்த 25 ஹெச்பி திறன் கொண்ட கனரக பம்புகள், உபகரணங்கள் ஆகியவற்றுடன் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் திறமையான பணியாளர்கள் அடங்கிய மீட்புக் குழுவினரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலக நுழைவாயில் அருகில் நடைபெற்றது.
இதில், நிறுவன சுரங்கத் துறை மற்றும் நிறுவனத் திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை(கூடுதல்பொறுப்பு) இயக்குனர் டாக்டர் சுரேஷ்சந்திரசுமன் கலந்துகொண்டு கொடியசைத்து குழுவினரை அனுப்பி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்எல்சி 5 சக்தி வாய்ந்த 25 ஹெச்பி திறன் கொண்ட கனரக பம்புகள், உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழுவினரைச் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளதன் மூலம், சவாலான காலகட்டங்களில், மாநில அரசுக்கு எப்போதும் உதவிக்கரமாக இருக்கும்.
மேலும் இயல்பு நிலையை மீட்டெடுத்தல் சுரங்கங்களில் நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்படும் அதிக திறன் வாய்ந்த கனரக நீர் இறைக்கும் பம்புகள் மூலம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் நீரை, வெகு விரைவாக வெளியேற்றி, இயல்பு நிலைக்குக் கொண்டு வர இந்தக் குழு பாடுபடும்” என்றார்.