கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதியிலுள்ள 3 தாலுகாக்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று என்.எல்.சி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற என்.எல்.சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 11 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நிறுவியது. இதனை என்.எல்.சி மனிதவள இயக்குனர் விக்ரமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். மேலும் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 1.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கலை அரங்கத்தையும் கல்லூரி முதல்வர் கோ.ராஜவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் விக்ரமன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்ரமன், "கடலூர் மாவட்டத்தில் 62 வருடங்களாக இயங்கி வரும் என்.எல்.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கிடைக்கப்பெறும் லாபத்தில் இருந்து 2% சதவீதம் ஒதுக்கப்பட்டு, மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வைக்கின்ற கோரிக்கைகளை, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், நீர் ஆதாரத்தை பெருக்குவது, கல்வி மற்றும் சுகாதாரம் மேம்பாட்டிற்கு உதவுவது உள்ளிட்ட நடப்பு ஆண்டிற்கான பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகின்றோம். மேலும் பரவனாறு கரையை பலப்படுத்துதல், வாலாஜா ஏரியை தூர்வாரப்பட்டு, நீர் ஆதாரத்தைப் பெருக்குவது உள்ளிட்ட பணிகளும் செய்து வருகின்றோம். விருத்தாசலம் அடுத்த கொல்லிருப்பு கிராமத்தை தத்தெடுத்து 160 தனிப்பட்ட கழிவறைகள் கட்டப் பட உள்ளது" என்றார்.
மேலும், "என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அந்த தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும்" அவர் கூறினார்.
அதேசமயம் என்.எல்.சி நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தீவிரப்படுத்த தொழிற்சங்கத்தினர் முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர்.