சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகத் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கோவிலில் முக்கிய வழியாகக் கருதப்படும் கீழகோபுரத்தில் இருந்து செல்லும் 21 படிகட்டு வழியில் பக்தர்கள் செல்லும் பாதையை அடைத்து நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி குடும்பத்தினருக்கு, கோவில் தீட்சிதர்கள் பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ருத்ரா அபிஷேக பூஜைகள் செய்துள்ளனர். இது தினந்தோறும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து கோவில் தீட்சிதர்களிடம் விசாரித்த போது இதுபோன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம்தான். நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் போது இந்த இடங்களில் ருத்ரா அபிஷேகம் நடைபெறும். சமீபத்தில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் அவர்களுக்கு இதே போன்று அதே இடத்தில் ருத்ரா அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இது ஒன்றும் விதிமீறல் அல்ல, பூஜைக்கு உரிய பணத்தை கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தினால், யாருக்கு வேண்டுமானாலும் இதே இடத்தில் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து என்எல்சி மக்கள் தொடர்பு அலுவலர் காதர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களைக் கூறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தபிறகு மகிழ்ச்சி அடைகிறார்கள். சேர்மன் கோவிலில் நடைபெற்ற ருத்ர அபிஷேக பூஜையில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆனால் இவர் பணம் எதுவும் செலவு செய்யவில்லை. வேறு அமைப்பு இதனைச் செய்திருந்தார்கள். இதில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இவர் சேர்மன் என்பதால் வெளியில் தெரிகிறது. அங்கு மற்றவர்களும் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர். எனவே திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புவதாகக் கூறினார். இவர் ஆன்மீக பக்தர் திருப்பதி உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு கோவிலுக்குச் செல்வார். என்எல்சி நிர்வாக சேர்மன் என்பதால் சிறப்பு செய்வார்கள். இதனை பிடிக்காதவர்கள் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்றார்.