கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி என தென்மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) மாலை, இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6-ல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணமும், நிரந்தர வேலையும் வழங்க வேண்டுமென தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
"நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் ஏற்பட்ட தீ விபத்தில் பாய்லர் வெடித்து சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் தீ காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு நிறுவனத்தின் அக்கறையின்மையும், அலட்சியமுமே காரணம். இந்த பாய்லர் பெல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தினை அடுத்து பெல் நிறுவனத்திற்கு இதன் பராமரிப்பு பணிகளை கொடுக்காமல் வேறு ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதன் புணரமைப்பு மற்றும் பராமரிப்புகளை கொடுத்து தரமற்ற முறையில் இயக்கி வந்துள்ளனர். இதனால் மேற்கண்ட விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது அனல்மின் நிலைய பிரிவில் பெருமளவில் தொழிலாளர்களும், பொறியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது குறைவான பொறியாளர்களும், தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு குழுவும் போதிய அதிகாரமின்றி செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் நீராவி பிரிவு மாறுபட்ட அழுத்தத்துடன் இயங்கி வந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அந்தக் குறைபாடுகள் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்படாமல் இயங்கி வந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் படியும் கரிதுகள்களை சுத்தம் செய்யாததால் அடிக்கடி தீ பிடிப்பதும், அதனை அணைப்பதுமாக இருந்துள்ளனர்.
எனவே என்எல்சி நிர்வாகம் செலவை மிச்சப்படுத்துவதாக தொழிலாளர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். தரமான முறையில் பராமரிப்பு பணிகளை செய்வதோடு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் அறிவித்திருப்பது போதுமானதாக இருக்காது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்துள்ளது. அதனையும் இதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே உயிரிழந்த தொழிலாளி சர்புதீன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், காயமடைந்த தொழிலாளிகளின் குடும்பத்திற்கு கணிசமான இழப்பீடும், அவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை சராசரி வாழ்க்கையாக அல்லாமல் பல்வேறு மனித உடல் உபாதைகளைகளுடன் பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டிய வாழ்க்கையாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.