'வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புதுச்சேரி அருகே நேற்றிரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 120 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இதனால் சென்னை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்த நிலையில், 'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கடலூர் மாவட்டத்திற்கு செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், இன்று கடலூருக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சென்னை தரமணியில் புயலால் பாதிக்கப்பட்ட பெரியார் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்ய உள்ளார்.