மதுரை காமராஜர் பல்கலை கழக பேராசிரியர் முருகன் சிபிசிஐடி போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மதுரை சுற்றுலா மாளிகையில் சந்தானம் விசாரணை குழுவை முருகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர்.
முன்னதாக முருகனின் மனைவி சுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கியமான நிர்வாகிகளை காப்பாற்ற தன் கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். முழுமையான விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை தெரியவரும். நிர்மலா தேவிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்ட போது கருப்பசாமியுடன் இணைந்து தங்குவதற்கு இடம் வசதி செய்து கொடுத்தது மட்டுமே உண்மை. இதில் நிர்மலாதேவியை கல்லூரிக்குள் அனுமதித்தவர்கள், அவரை கல்லூரி வளாகத்தில் வைத்து சுற்றி காண்பித்தவர்கள், என பலரை காப்பாற்ற எனது கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக என் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களது குடும்பத்தினர் தலைமறைவாக இருக்க வேண்டும் என சிலர் போனில் மிரட்டினர். குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக எனது கணவர் குற்றவாளி ஆக்கப்படுகிறார், எங்களது குடும்பத்திற்கு மிரட்டல் வருவதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கருப்பசாமிதான் நிர்மலா தேவியை எனது கணவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தடயங்களை அழித்துவிட்டனர். புத்தாக்க பயிற்சி நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். மதுரை காமராஜ் பல்கலையில் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்க ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மூலம் கணவர் முருகனிடம் நிர்மலா தேவி அணுகினார். அதற்கு கணவர் முதலில் மறுத்தார். பின் அவர் பயிற்சியில் பங்கேற்க அனுமதித்தது யார். தங்க அறை கேட்பது தொடர்பாக கணவரை சந்தித்துள்ளார். கிளார்க்கை சந்திக்கும்படி நிர்மலா தேவியை கணவர் அனுப்பி விட்டார். அவருடன் தஞ்சை பேராசிரியை ஒருவர் உட்பட மூவர் தங்கினர். 'அவருக்கு 'ஏசி' அறை ஒதுக்கப்பட்டதாக சிலர் கூறியதாக கணவர் என்னிடம் தெரிவித்தார். அது யார்? இதுகுறித்து விசாரிக்கப்பட்டதா? சஸ்பெண்ட் ஆன பின் கருப்பசாமி மூலம் கணவரை நிர்மலா தேவி சந்தித்து, "இதில் இருந்து காப்பாற்றுங்கள்," என கேட்டார். இது சம்மந்தமாக பேசக்கூடாது. கல்லுாரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள்,' என கணவர் அவரை அனுப்பி விட்டார். இதுதவிர அவருக்கும், நிர்மலா தேவிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பல்கலை வளாகத்திற்குள் நிர்மலா தேவியை சிலர் காரில் வைத்து சுற்றிக்காட்டிய தகவல் வெளிவரவில்லை. நிர்மலா தேவி விவகாரம் வெளியான பின் எந்த பதற்றமும் இல்லாமல் கணவர் இருந்தார். சம்மன் அனுப்பி விசாரிக்க அழைத்தால் நானும் செல்லுவேன்,' எனவும் கூறினார். விசாரிக்க அழைத்து சென்ற முதல் நாள் கணவரின் முன்னாள் வழக்கறிஞர், "குடும்பத்துடன் தலைமறைவாகி விடுங்கள். குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவர்," என்றார். தவறு செய்யாமல் ஏன் தலைமறைவாக வேண்டும் என கூறி இங்கேயே இருந்தோம். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று திரும்புவதற்குள் 'பேராசிரியர் முருகன் தலைமறைவு,' என தகவல் பரப்பினர். நிர்மலா தேவி என் கணவர் பெயரை குறிப்பிட்டார் என்பதற்காக கைது செய்துள்ளனர். அந்த ஆடியோவில் குறிப்பிட்ட மற்றவர்களிடம் போலீசார் விசாரிப்பார்களா? நிர்மலா தேவியை புத்தாக்க பயிற்சிக்கு அனுமதித்தது, 'ஏசி' அறைக்கு அவரை மாற்றியது, காரில் வைத்து சுற்றிக்காட்டியது என அதில் தொடர்புடையவர்களை போலீசார் விசாரிக்கவில்லை. என் கணவரை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.