நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தர்பார். இத்திரைப்படம் 9-1-2020 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கிடையில் இந்தப் படம் வெளியாவதற்கு தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்திடமிருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய் பெற்றதாகவும், 2.o படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்தத் தொகையை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட ரூ.4.9 கோடி வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும். உத்தரவாதத் தொகை செலுத்தாத பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் 9-1-2020 அன்று தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.