Skip to main content

கள்ள ஓட்டு கும்பலை காப்பாற்றி காரில் அழைத்து சென்ற அமைச்சர்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5ந்தேதி நடந்து முடிந்துள்ளது. காலை முதல் மதியம் 1 மணி வரை மந்தமாக இருந்த வாக்குப்பதிவு அதன்பின் கிடுகிடுவென உயர்ந்தது. இது பலருக்கும் பெரும் ஆச்சர்யத்தை தந்த நிலையில், அதிமுகவினர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் பகுதிகளில் இருந்து கள்ள ஓட்டு போடவே தனியாக கும்பல் கும்பலாக மக்களை அழைத்து வந்து கள்ள ஓட்டுப்போட்டார்கள், இதோ எங்களிடம் ஆதாரம் என கிளம்பியுள்ளது வாணியம்பாடி நகர திமுக.

 

n


இதுப்பற்றி விசாரித்தபோது, வாணியம்பாடி நகரத்தின் பல இடங்களில் அமைச்சர் நிலோபர்கபில் ஏற்பாட்டில் கள்ள ஓட்டு போடுவதற்காக வெளிமாவட்டத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளனர். அப்படி வந்த இரண்டு கும்பல் எங்களிடம் சிக்கியது. வாணியம்பாடி முதல் வார்டில் திமுகவினர், வீடு வீடாக சென்று வாக்காளர்களை வாக்களிக்க வாருங்கள் என அழைத்துக்கொண்டிருந்தபோது, அந்த வார்டுக்கு சம்மந்தமில்லாத ஒரு பெண், இரண்டு ஆண்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொண்டிருந்தனர்.


இதைப்பார்த்துவிட்டு அவர்களை பிடித்து விசாரித்தபோது, வாக்குக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருந்தனர். அதோடு, கள்ள ஓட்டு போடவும் ஆட்களோடு வந்திருக்கிறோம் எனச்சொன்னார்கள். அவர்களை பிடித்து காவல் ஆய்வாளர் சந்திரசேகரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டோம். மாலை அதே கும்பல் கள்ள ஓட்டு போட அதே ஒன்னாவது வார்டுக்கு வந்தபோது, அங்கிருந்த திமுக நகர செயலாளர் சாரதி தலைமையிலான திமுகவினர் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து செல்ல ஆட்டோவில் உட்காரவைத்தனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், அவர்களை தங்களுடன் அழைத்து சென்று வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அனுப்பியுள்ளார்.


அதேபோல் பெரியபேட்டை என்கிற பகுதியில் கள்ள ஓட்டு போட வந்த ஒரு கும்பலை திமுகவினர் பிடித்து ஓரு வீட்டில் அடைத்துவைத்துள்ளனர். அங்கு வந்த அமைச்சர் நிலோபர்கபில், அவரது உதவியாளர் அருண், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், அதிமுக ந.செ சதாசிவம் போன்றவர்கள் ஒரு சுத்தியலை எடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களை தங்களுடன் காரில் அழைத்து சென்றுள்ளார் அமைச்சர்.


இதுப்பற்றி திமுக ந.செ சாரதி கேள்வி எழுப்ப, மந்திரிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சரின் உதவியாளர் அருண், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் இருவரும், திமுகவை சேர்ந்தவர்களை பிடித்து தள்ளி அடித்து விரட்டியுள்ளனர். இதில் ஒரு திமுக நிர்வாகிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


நான் அமைச்சருக்கு தான் ஆதரவாக இருப்பேன்.  உங்களால் முடிஞ்சத பார்த்துக்குங்க என திமுகவினரிடம் சவால் விட்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகர், கள்ள ஓட்டு போட வந்த கும்பலை அமைச்சரின் காரில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளார். இதற்கான வீடியோ தற்போது வெளியாகி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்