நீலகிரி மாவட்ட கிராமத்தில் அக்கார்டு அமைப்பு கட்டியுள்ள ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவலா கிராமத்தில் 180 ஏக்கர் பரப்பை அக்கார்டு எனும் சமுதாய அமைப்பு மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைக்கான அமைப்பு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தீர்மானித்து மாவட்ட வருவாய் அதிகாரி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி அக்கார்டு அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 48 மணி நேரத்தில் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள நிரந்தர கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதியில் ரிசார்ட் போன்ற வர்த்தக கட்டுமானங்களை மேற்கொண்டு விதிகளை மீறி இந்த அமைப்பு செயல்பட்டது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல காலி இடத்தை இரண்டு நாட்களுக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அகார்டு அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.