கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அசோக் - கமலி தம்பதியினருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிழைப்பு தேடி குழந்தை நட்சத்திராவுடன் சென்னை சென்றவர்கள் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு நட்சத்திராவிற்கு உடல்நலம் பாதிக்கவே, சென்னை ராமாபுரத்தில் உள்ள பேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள் நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். குழந்தையின் சிறுமூளை பாதிப்பிற்கு உள்ளாகி சுய நினைவிழந்து உடல்நலம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்துள்ளார். மருத்துவர்கள் ஊசி மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வெளியில் வாங்கி வருமாறு அசோக்கிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சுயநினைவு இழந்த நட்சத்திராவின் உடல்நலத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன் தனது சொந்த ஊருக்கு சென்று கடன் வாங்கியாவது குழந்தையை காப்பாற்றி விடலாம் என அங்கிருந்து உளுந்தூர்பேட்டை வந்துள்ளனர். பின்னர் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப்பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை பெற்று வந்த நிலையில், அதனை ஃப்ரிட்ஜில் பதமாக வைப்பதற்கு வசதி இல்லாமல், மண்பானையில் தண்ணீரை ஊற்றி அடியில் உள்ள மணலில் மருந்துகளை புதைத்து வைத்து தினந்தோறும் ஊசி மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களில் மருந்துகள் கெட்டுப்போவதால் சரியான மருந்துகள் கொடுக்கமுடியாமல், சிறுமியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக முதல்வர் தங்கள் பிள்ளை நட்சத்திராவிற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்யவேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.