நீர்நிலைகளில் கழிவு நீர் மற்றும் சாயப்பட்டறை நீர் கலப்பதால் நீர்நிலை மாசடைவதுடன் சில இடங்களில் ரசாயன மாற்றம் காரணமாக வெண் நுரை பொங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் நுரை நுரையாகப் பொங்கி வந்தது. நிலத்தடி நீர் வரை ரசாயன கழிவுநீர் சென்றுவிட்டதை இந்த சம்பவம் உணர்த்தியிருந்தது. இந்நிலையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாயிலிருந்து திடீரென வெண் நுரைகள் பஞ்சு போன்று சாலையில் பரவியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது படும் இந்த நுரை அரிப்பை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அயன் பாப்பாகுடி கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பீரோ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன நீர் ஆகியவை கலக்கிறது. இதனால் கண்மாய் நீர் மாசடைந்து இதுபோன்ற வெண் நுரை பொங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் கால்வாயில் இருந்து வெளியேறும் நுரை வாகன ஓட்டிகள் மீது படாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் திரை(பசுமை வலை) போட்டுள்ளனர். இருப்பினும் திரையைத் தாண்டி வெண் நுரைகள் சாலையில் படர்ந்து வருகிறது. கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றினாலே நீர் ஓட்டம் அதிகமாகும் எனக் கூறும் அப்பகுதி மக்கள், நீர் நிலையில் ரசாயனக் கழிவுகள் கலப்பதைத் தடுத்து நிறுத்துவதை விட்டுவிட்டுத் திரை போட்டு நுரையைத் தடுத்து என்ன லாபம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.