நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள குந்தலாடியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்தது கடையின் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் குந்தலாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குந்தலாடியில் உள்ள மதுக்கடை திறந்து இருப்பதை போலீசார் கவனித்தனர். அந்த சமயத்தில் கடையின் கதவு திறந்து இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசார் மதுக்கடை அருகே சென்று பார்த்த போது கடைக்குள் இரண்டு மர்ம நபர்கள் இருந்தனர்.
அப்போது அங்கிருந்த இருவரும் மதுபாட்டில்களை சாக்குப்பையில் நிரப்பிக் கொண்டு இருந்தனர். ஏற்கனவே கடையில் இருந்த பணப்பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து இருப்பதையும் போலீசார் கவனித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். இருப்பினும் போலீசார் துணிச்சலுடன் இருவரையும் பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் திடீரென்று அங்கிருந்த மது பாட்டில்களை உடைத்து போலீசாரை நோக்கி வீசியுள்ளனர். இதில் போலீசார் இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் தற்காப்பு முயற்சியாக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அங்கு இருந்த ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அந்த நபர் தப்பி ஓட முடியாமல் அங்கேயே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் அங்கிருந்து தப்பி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த இரு காவலர்கள் மற்றும் கொள்ளையனை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசார் கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் பந்தலூர் அடுத்துள்ள பாட்டவயல் அருகே கொட்டாடு என்ற பகுதியை சேர்ந்த சாம்பார் மணி என்பதும் அவருடன் வந்தவர் ஜிம்மி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கேரளாவில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய ஜிம்மியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.