நீலகிரி மாவட்டம், கூடலூர் கோத்ராவயல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 44). இவரது மனைவி லைலா (38). இவர்களுக்கு 17 மற்றும் 18 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜன் மதுவுக்கு அடிமையானதால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து ஈரோட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அதிக அளவில் மது குடித்ததால் ராஜனுக்கு குடல் மற்றும் உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும், டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக ராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய ராஜன் மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார். இதையடுத்து அவர் அங்கேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ராஜன் மனைவி லைலா நேற்று ஈரோடு வந்து அவரது உடலைப் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.