Skip to main content

“மகன் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்..” - எஸ்.பி.அலுவலகத்தில் பெற்றோர் வேதனை

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Government want to recover my son parent who gave petition to SP Office

 

ஈரோடு, மோளக் கவுண்டன்பாளையம் காந்திபுரம், பாலதண்டாயுதம் தெருவைச் சேர்ந்தவர் உமா பாரதி. இவரது மனைவி நளினி. இவர்கள் இருவரும் நேற்று (10 பிப்.) ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து போலீஸ் அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். 
 


பிறகு அவர்கள் கூறும்போது, "நாங்கள் ஈரோட்டில் உள்ள சாயப் பட்டறைகளில் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு 22 வயதில் கவுதம் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான். அதன்பிறகு வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சென்று வந்தான். அதில் சரியான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், வெளிநாட்டிற்கு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சி மேற்கொண்டான். 

 

எனது கணவரின் உறவினர் ஒருவர் கோவையில், வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்ட்டாக உள்ளார். அவர் மூலம், சென்ற 2019ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மலேசியாவில் வெல்டிங் வேலைக்காக எனது மகன் சென்றான். மறுநாள் 1ஆம் தேதி மலேசியாவிற்கு சென்றுவிட்டதாக எனது மகன் ஃபோன் மூலம் தெரிவித்தான்.  

 

Government want to recover my son parent who gave petition to SP Office

 

அதன்பிறகு, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி மற்றும் மார்ச் மாதம் 19ஆம் ஆகிய தேதிகளில் இரண்டு முறை உறவினர் மூலம் ரூ.25,000 பணம் எங்களிடம் கொடுத்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு மகனுடன் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்களும் பலமுறை முயற்சி செய்தும் அவனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. 

 

இதுகுறித்து எனது கணவரின் உறவினரைக் கேட்டால், அவர் முறையாகப் பதிலளிக்கவில்லை. ஃபோன் செய்தாலும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய எங்கள் மகன், தனது செல்ஃபோன், பாஸ்போர்ட் எல்லாவற்றையும் ஒரு கும்பல் பறித்துக்கொண்டது என்றும், ஏழு, எட்டு மாதங்களாக யாரிடமும் பேச அனுமதிக்கவில்லை என்றும் ஒரு காட்டில் தன்னை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் என்னைக் காப்பாற்றுங்கள் என்றும் தெரிவித்தான். 

 

இதையடுத்து அந்த ஃபோன் எண்ணும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு ஒரு எண்ணில் இருந்து ஃபோன் வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகனை அனுப்ப வேண்டும் என்றால் ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.  நாங்கள் அதற்கு எனது மகனை என்னிடம் பேச சொல்லுங்கள். நாங்கள் பணம் தர தயாராக இருக்கிறோம் என்று கூறினோம். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார். இதையடுத்து என் மகன் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனது மகன் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே, தயவு செய்து எனது மகனை மலேசியாவிலிருந்து மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்