Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது காவல் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார்

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் விருப்ப மனு வாங்குவது மக்களை சந்திப்பது போன்ற நிகழ்வுகள் கடந்த ஒரு மாதமாக வேகமாக நடந்து வருகிறது.

 

minister C. Vijayabaskar



புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை நகரில் அ.தி.மு.க. வார்டு வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வாரம் முதல்கட்டமாக ஒரு வார்டுக்கு சென்று கூட்டம் நடத்திய போது அங்கு திரண்டிருந்த மக்கள் பலரும் குடிதண்ணீர் பிரச்சணை உள்ளிட்ட பல பிரச்சணைகளை முன்வைத்தனர். அதனால் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் சொல்லிவிட்டு அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் புதுக்கோட்டை நகருக்கு மட்டும் குடிதண்ணீர் பிரச்சணையை தீர்க்க சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் திட்டம் தயாராகி வருகிறது என்று சொல்லிவிட்டு சென்றார். 


 

 

    அதன் பிறகு செல்லும் இடங்களில் இதே போல பிரச்சனைகள் எழலாம் என்பதால் அ.தி.மு.க என்று சொல்லிக் கொண்டு மக்களை சந்திப்பதை நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு மக்களை சந்தித்து குறை கேட்கும் முகாம் என்று ஒவ்வொரு நாளும் சில கிராமங்களுக்கு சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிப்பதுடன் முதியோர் உதவித் தொகை போன்ற சிறு சிறு மனுக்களுக்கு உடனடி தீர்வுகளும் எடுக்கப்பட்டது. இதே போல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போல மக்களிடம் நேரடியாக  பேசிவிட்டு செல்கிறார்.


 

 

    ஆனால் தி.மு.க சட்டமன்றத் தொகுதிகளுக்குள் செல்லும் போது அரசு சார்பில் நடக்கும் மக்கள் சந்திப்பு குறை தீர்வு முகாம்களுக்கு  கூட அந்தந்த தொகுதி தி.மு.க எம்.எல்.ஏக்களை அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 
 

சில நாட்களுக்கு முன்பு திருமயம் தொகுதியில் பொன்னமராவதி உள்ளிட்ட பல இடங்களில் முகாம் நடந்தது. அதில் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதிக்கு அழைப்பு இல்லை என்றும், அதனால் கட்சித் தொண்டர்கள், வாக்களித்த வாக்காளர்கள் மன உளைச்சலில் உள்ளனர் என்றும், அதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தூண்டுதலின்பேரில் தான் அதிகாரிகள் இப்படி ரகுபதி எம்.எல்.ஏ வை அரசு விழாக்களிலும் புறக்கணிக்கிறார்கள். மேலும் 17 ந் தேதி நடந்த 66 வது கூட்டுறவு வாரவிழா விளம்பரங்களில் தொகுதிக்கு சம்மந்தமில்லாத எம்.எல்.ஏக்கள் பெயர்களை போட்டவர்கள் தி.மு.க தொகுதி எம்.எல்.ஏக்களை அழைக்கவில்லை. பெயரும் போடவில்லை அதனால் மேலும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னமராவதி, காரையூர் காவல் நிலையங்களில் தி.மு.கவினர் புகார் கொடுத்துள்ளனர். 
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க – தி.மு.க மோதல்கள் தொடங்கி உள்ளதால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரிதாக எதிரொலிக்கும் என்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்