சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் கோயிலில் ஒன்றாக பணிசெய்த தீட்சிதர்கள் உள்ளிட்ட அனைவரையும் தனிமைபடுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணையளார் சுரேந்தர்ஷா உள்ளிட்ட நகராட்சி கரோனா தடுத்து பணி ஊழியர்கள் தொற்று பாதிக்கப்பட்ட தீட்சிதர்களின் தொடர்பில் இருந்த தீட்சிதர்களின் வீட்டு சுவற்றில் கரோனா குறித்து துண்டு பிரசுரத்தை ஒட்டினார்கள்.
இதற்கு தீட்சிதர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து சில வீடுகளில் ஒட்டப்பட்ட துண்டுபிரசுரத்தை கிழித்தனர். பின்னர் அனைவரும் கீழசன்னத்தில் சமூக இடைவெளியுடன் ஒன்றுகூடி துண்டு பிரசுரம் ஒட்டியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எங்க வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா, ஏன் இந்த பிரசுரத்தை ஒட்டினீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என சத்தம் போட்டனர்.
இதனையறிந்த காவல்துறை ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் இது வழக்கமான நடவடிக்கைதான் என்று சமாதனம் செய்தனர். ஆனால் தீட்சிதர்கள் இதனை ஏற்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டமாக நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் தீட்சிதர்கள் எங்க வீடுகளில் துண்டுபிரசுரம் ஒட்டிய அதிகாரிகள் எப்படி ஒட்டினார்களோ அதேபோல் துண்டுபிரசுரத்தை மீடியாவை அழைத்து வந்து கிழிக்கவேண்டும். இல்லையென்றால் இந்த இடத்தைவிட்டு செல்லமாட்டோம் என்று கூட்டமாக 3 மணி நேரம் இருந்தனர்.
இதில் சில தீட்சிதர்கள் ஒட்டிய பிரசுரத்தை கிழிக்கவில்லையென்றால், சிதம்பரத்தில் உள்ள அனைத்து தீட்சிதர்களின் குடும்பத்திலுள்ள ரேசன் கார்டு, ஆதர்காடு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்க போகிறோம் என காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனைதொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் அவர்களிடம் இனிமேல் நோட்டீஸ் ஒட்டமாட்டார்கள். இந்த பிரச்சனையை இதனுடன் விட்டுவிடுங்கள் என கேட்டுகொண்டதின் பேரில் தீட்சிதர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.