சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி (02.02.2024) சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர் மூலம் தமிழகத்தில் குழு அமைப்பது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மாதரசியிடம் சாட்டை துரைமுருகன் பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மனை கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாவும் கூறப்பட்டது.
அதே போன்று சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் என்பவர் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் 7 புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் என்.ஐ.ஏ. உத்தரவுப்படி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோர் தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் கடந்த 7 ஆம் தேதி ஆஜராகினர். இவர்கள் இருவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சாட்டை துரைமுருகன் இதுவரை யூடியூப்பில் பதிவு செய்த வீடியோக்களை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.