கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவரும் இவரது நண்பரும், கூலித் தொழிலாளியுமான, சக்திவேல் (வயது 45) என்பவரும் அவ்வப்போது நெய்வேலி என்.எல்.சி பகுதிகளில் இரும்பு திருடுவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகுமார் என்பவரும் இணைந்து நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரும்பு திருடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி சுபாஷ் சந்திரகுமார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் சுபாஷ் சந்திரகுமாரின் அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ், சக்திவேல் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
சக்திவேலும் அவரது கூட்டாளியுமான இளங்கோவனும், கடந்த 14-ஆம் தேதி, மேலக்குப்பம் பொன்னம்பலத்தான் தெருவில் அமைந்துள்ள வீரன் கோவிலில் படுத்திருக்கும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், அர்னால்ட், விக்கி, சுரேஷ்(எ)கோவிந்தன், காக்கி என்ற விஜயபாலன் உள்ளிட்டோர் சேர்ந்து, "எனது தம்பி சுபாஷ் சந்திரகுமாரை திருட்டு சம்பவத்திற்க்கு அழைத்துச் சென்று, அவரை சாகடித்தது நீங்கள் தான்டா...." என்று கூறி, இளங்கோவனையும், சக்திவேலையும் சரமாரியாக, கையாளும் கட்டையாலும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு தூக்கி சென்று, சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.
இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். சக்திவேல் இறந்ததை பார்த்த அவரது கூட்டாளியான இளங்கோவன் அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு சென்று, இதுகுறித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சக்திவேலை அடித்துக் கொன்றதாகவும், தன்னையும் தாக்கினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளங்கோவனை அழைத்துக் கொண்டு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்த குற்றவாளிகளான 6 பேரை நெய்வேலி தெர்மல் போலீசார் தேடிவந்த நிலையில், அர்னால்ட் (வயது 22), பாண்டியன் (வயது 25), விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று மீதமுள்ள மூன்று குற்றவாளிகளான சுபாஷ் சந்திரபோஸ், சுரேஷ் என்கிற கோவிந்தன், காக்கி என்ற விஜயபாலன் ஆகியோரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.