உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில் பல்வேறு வழிபாட்டுத்தளங்களிலும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று பழனி மலை ஏறுவதற்கு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் என்பதாலும் பழனியில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் திருச்செந்தூர் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் போக்குவரத்துகளை சரி செய்து வருகின்றனர். பாதுகாப்பிற்காகவும் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.