உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்திலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து மக்கள் 2024ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாகக் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
அதோடு ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் எனப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இன்று (31.12.2024) மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்படும் சாலைகள், மூடப்படும் மேம்பாலங்கள் ஆகியவற்றின் விவரங்களைச் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதோடு மெரினா, எலியட்ஸ் ஆகிய கடற்கரைக்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த கூடிய இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவலர்கள், குதிரைப் படைகள் மற்றும் மணலில் செல்லக் கூடிய வாகனங்கள், தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் ஆகியவை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பபட உள்ளன. கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (BIKE RACE) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு போன்ற 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. அதோடு சென்னையில் உள்ள மேம்பாலங்களும் அனைத்து இன்று (31.12.2024) அன்று 10.00 மணி முதல் நாளை (01.01.2025) காலை 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.