Skip to main content

திண்டுக்கல்லில் உருவாகும் புதிய சுற்றுலாத்தலம்!! 

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

ஆத்தூர் புல்லாவெளியில் உள்ள நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க அதிகாரிகள் ஆய்வு.
 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஒன்றுதான் சுற்றுலா தலமாக உள்ளது. இதுதவிர பல இடங்களில் வாய்ப்புகள் இருந்தும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நீர்வீழ்ச்சியுடன் கூடிய சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் இருப்பதால் வருடம் முழுவதும் பொதுமக்கள் கொடைக்கானல் மலைக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். 

 

 New tourism in Dindigul


திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை சேர்ந்த மணலூர் ஊராட்சி ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புல்லாவெளியில் நீர்வீழ்ச்சி உள்ளது. கோடை மற்றும் மழை காலங்களில் குளிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கும்பக்கரை, குட்லாடம்பட்டி மற்றும் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர். பல வருடங்களாக புல்லாவெளியில் இந்த நீர்வீழ்ச்சி இருந்தும் குறிப்பிட்ட சிலர் மட்டும் தவறாமல் தினசரியும் மாதம் ஒரு முறையும் வந்து கொண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டிருந்தும் மணலூர் ஊராட்சிக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் இருந்து வந்தது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஒன்றியக்குழு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஹேமலதா மணிகண்டன் மணலூர் ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்து வரும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் சிறப்பாக செயல்பட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக்க மனு கொடுத்ததின் பயனாக சுற்றுலா அலுவலர் பாலமுருகன் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.சீத்தாராமன் தலைமையில் ஒன்றியகுழு துணைத்தலைவர் எம்.ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதாசெல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன் ஊராட்சி செயலர் திருப்பதி, ஆகியோர் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு ஆய்வு செய்ததின் பயனாக மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய சுற்றுலா தலம் உருவாக உள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்பு வேலிகள், குளியலறைகள், உடைமாற்றும் அறைகள், பூங்காக்கள், கழிப்பறைகள், வாகனங்களை நிறுத்துமிடம் உட்பட பல்வேறு வசதிகளை செயல்படுத்த முடிவு செய்து அறிக்கை தயார் செய்துள்ளனர். 

 

 New tourism in Dindigul


இதுகுறித்து ஆத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன் கூறுகையில், பெரும்பாறை அருகே உள்ள இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மலை கிராமமான மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, கானல்காடு, கல்லகிணறு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர்,பெரியூர் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரானது புல்லாவெளியில் நீர்வீழ்ச்சியாக உள்ளது. பல வருடங்களாக பாதுகாப்பற்ற நிலையில் தான் பொதுமக்கள் குளித்து வந்தனர். மலை கிராமமான மணலூர் ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தவும், புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சுற்றுலாத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்ததின் பயனாக இன்று சுற்றுலா அலுவலர் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். 

விரைவில் இப்பகுதியில் புதிய சுற்றுலாத்தலம் உருவாகும் என்றார். மேலும் மலையில் வசிக்கும் கிராம மக்களுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவரும் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.ஹேமலதா மணிகண்டனுக்கு மலை கிராம மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்