2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
பச்சைநிறத்துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் வங்கி கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து கணினிமயமாக்கி புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களை உள்ளடக்கிய எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்; ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்; கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு; 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு.
தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும்; இத்திட்டம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில், ரூ.19 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்; தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை அதிகரித்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்துப் பரவலாக்க 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க, 50 லட்சம் நிதி ஒதுக்கீடு; விவசாயிகள் வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் தக்காளி சீராகக் கிடைக்க ரூ.19 கோடியும் வெங்காயம் சீராகக் கிடைக்க ரூ.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்கள் பண்ணைச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படும். கல்வித்துறையுடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.