புதுக்கோட்டை மாவட்டம் புட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இயற்கை உபாதை கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.
கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்த பிறகு குடிநீரில் இயற்கை உபாதை கலந்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இதனிடையே அந்த கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ் பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு இயற்கை உபாதை கலக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்கு பதிலாக புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை புதிய குடிநீர் குழாய்களை திறந்து வைத்தார். நிகழ்வில் அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேங்கைவயல் கிராமத்தில் தோல் நோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.