கொடைக்கானலில் புது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானலில் 1993-ஆம் ஆண்டில் மாஸ்டர் பிளான் விதிப்படி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த மாதம் 43 கட்டடங்களுக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1415 கட்டடங்களுக்கு சீல் வைத்து மார்ச் 11ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கொடைக்கானல் நகராட்சிக்கு ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானலில் உள்ள கட்டிட உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்சோ கொடைக்கானலில் புது மாஸ்டர் பிளான் திட்டம் மார்ச் 6ம் தேதி நடைமுறைக்குக் கொண்டுவரும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து கொடைக்கானலில் நகரமைப்பு மற்றும் வீட்டு வசதி வாரியத் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி. அரசு முதன்மை செயலாளரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரியான கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு கொடைக்கானல் வந்து நகராட்சி கமிஷனர் முருகேசன மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருடன் கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டனர். அதாவது கொடைக்கானல்லில் உள்ள செண்பகனூர், நாயுடுபுரம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அதிகாரிகளோ..... கொடைக்கானலில் புதிய கட்டுமான வரைவு முழுமைத்திட்டம் சுற்றுப்புற சூழல் மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுலாபகுதிகளின் தளங்களை பாதிக்காத வண்ணம் விரைவில் அமுல்படுத்தப்படும் என்றும் புதிய கட்டுமான முழுமைத் திட்டம் அமுல் படுத்தப்பட்டவுடன் ஏற்கனவே கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை புதிய வரவு விதிகளின்படி மாற்றி அமைக்கப்படும் என்று கூறினார்கள்.
இந்த புதிய முழுமைத் திட்டத்தின் அடிப்படையில் தற்பொழுது உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வைக்கப்பட இருக்கின்ற கட்டடங்கள் ஆகியவை ஓரளவுக்கு பாதிப்பிலிருந்து மீள வாய்ப்பு உள்ளது.