கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், ந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முக கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் சூலூரில் இன்று திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அவிநாசி நோக்கி கருமத்தம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்த போது அவர்களின் வாகனத்தை வழிமறித்த போலீசார் காரின் பின்சீட்டில் பட்டுப்புடவை, பட்டுவேட்டியில் கழுத்தில் மாலையுடன் புதுமண ஜோடி உட்காந்து இருந்தனர். இரண்டு பேரும் மாஸ்க் போடவில்லை. இதனைப்பார்த்த போலீசார் அவர்களிடம் கரோனா வைரஸ் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் எடுத்துக்கூறி, இரண்டு பேருக்கும் மாஸ்க் கொடுத்து அணிய சொல்லிவிட்டு, அதன் பிறகு வாழ்த்துக்கள் கூறி அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தை புதுமண தம்பதியர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.