இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.