சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக மூன்று நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை என இரண்டு நீதிமன்றங்களில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 62 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அதே சமயம் நீதிபதி மொத்த பணியிடங்களில் 13 காலியிடங்கள் இருந்து வந்தது. இந்நிலையில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நீதிபதிகள் ஆர். பூர்ணிமா, எம். ஜோதி ராமன் மற்றும் அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களில் என்.ஜோதி ராமன் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 3 நீதிபதிகளும் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இவர்கள் மூவருக்கும் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.