தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நேற்று பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் தொடங்கி வைத்த புதிய உழவர் சந்தையால் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் புதிதாக உழவர் சந்தையை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 3.51 லட்சம் மதிப்பிலான உழவு இயந்திரம், மினி டிராக்டர் மானிய விலையில் விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மானிய விலையில் விவசாய சிறுதானிய விதைகள் மற்றும் பூச்சி மருந்து பொருட்களை விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் வேளாண்மைத் துறையின் இணை இயக்குநர் முருகேசன், வேளாண் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மண்ணச்சநல்லூர் பகுதியில் உழவர் சந்தை தற்போது தொடங்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தங்களது வேளாண் விலை பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு உழவர் சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபமும் பெற முடியும் என்று தெரிவித்தனர் . இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.