
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் சார்பில் மாவட்ட அறிவியல் மையம் என்ற பெயரில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டு முதல் இந்த மாவட்ட அறிவியல் மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்த மையத்தின் பெயர் பலகையானது முதலில் தமிழும், அதன் கீழே ஆங்கிலத்திலும் இருந்து வந்தது. இத்தகைய சூழலில் தான் மூன்றாவது மொழியாக இந்தி இடம் பெறும் வகையில் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கும் இடையே 3வது மொழியாக இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.