நாட்டு நாய்களை அடையாளம் கண்டறியும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நாட்டு நாய்கள் வளர்ப்போர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பேசிய கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன், தமிழகத்தில் நாட்டு நாய் வளர்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழிந்துவரும் நாட்டு நாய் இனங்களான சிப்பிபாறை, கோம்பை ராஜபாளையம், கன்னி உள்ளிட்ட நாட்டின நாய்கள் பாதுகாக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நாய்கள் காணாமல் போவதை தடுக்கவும், அதன் அடையாளங்களை கண்டறியவும் புதிய முயற்சியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ கழகம் சார்பில் நாய்கள் உடம்பில் மருத்துவ குணம் கொண்ட மைக்ரோசிப் பொருத்தும் பணி நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் சிறப்பு முகாம் துவங்கப்பட்டது.
இந்த முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் துவங்கி வைத்தார். மருத்துவ முகாமில் நாட்டு நாய்களுக்கு இசிஜி, எக்கோ மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் நாட்டு நாய்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அதற்கான நோய் கண்டறியும், சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்தியாவிலே முதன்முறையாக நாட்டு நாய்களுக்கு என சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மைக்ரோ சிப்பை பொருத்தும் பணி நெல்லையில் தான் நடைபெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.