![Trichy Murugan Temple issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/nAUryegCizfKx_Yhy5Jby34Ct4uPrAGZHhf7ytGxK4U/1706511133/sites/default/files/inline-images/th-1_4596.jpg)
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள எடமலைப்பட்டியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ராமச்சந்திரா நகரில் உள்ள எடமலை முருகன் கோவிலை, 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு, சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறி போலீஸ் மற்றும் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால், கடந்த 2004 ல் நீதிமன்றத்தில் ஆணை பெற்று, எடமலை முருகன் கோவிலில் எடமலைப்பட்டி பொதுமக்கள் சார்பில் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளனர். இதை மர்ம நபர்கள் சிலர் நேற்று இடித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசில் அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், எடமலைப்பட்டி மக்கள் நூற்றுக் கணக்கானோர் திரண்டு வந்து திருச்சி கிராப்பட்டி மேம்பாலத்தில் அமர்ந்து இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக போலீசார் மறியல் செய்த அந்த பொது மக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காம்பௌண்ட் சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டர் வந்து உறுதி அளிக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்கிறோம். இந்திய குடியுரிமையே வேண்டாம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் வேனில் ஏறி எங்களை கைது செய்யுங்கள் என்று வலியுறுத்தினர். பொதுமக்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று போராட்ட கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் ஆம்புலன்ஸக்கு மட்டும் வழிவிட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசாரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பகுதி கவுன்சிலர் முத்து செல்வமும் பேச்சு வார்த்தை நடத்தினார். சுவர் இடித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மக்கள் போராட்டத்தைவிட்டு கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.