நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. சங்கரன்கோவிலும் இணைக்கப்படும் என்ற தகவலால் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும், பொது மக்கள் உட்பட அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவில் தொகுதி நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று தங்களின் கருத்தை வலியுறுத்தினர். மேலும் அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் தொகுதியின் முழுமையான மக்களின் நலன் பாதிக்கப்படுவதோடு, கிராமங்களில் வசிக்கும் மக்கள் தென்காசி சென்று வர சிரமம் ஏற்படும் என்ற கருத்தை முன் வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று சங்கரன்கோவில் நகரம் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து ம.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக திருவேங்கடம் தாலுகாவை சேர்ந்த கலிங்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்தெல்லாம் வந்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் நகரின் தேரடித்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை ஏற்க முன்னிலை வகித்தவர் ந.செ. ஆறுமுகச்சாமி. ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுக்கோட்டை செல்வம், கே.எம்.ஏ. நிஜாம், அழகுசுந்தரம் உள்ளிட்டோர் சங்கரன்கோவில் தொகுதி நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே சங்கரன்கோவில் நகர் நல குழு சார்பில் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அமைக்கக் கோரி வரும் 17ம் தேதி கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.