நெல்லை மாவட்டம், களக்காடு காவல் நிலைய வழக்கு தொடர்பாக முத்து மனோ என்பவர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறையில் குறிப்பிட்ட பிரிவினரால் அவர் தாக்கப்பட்டார். ஐ கிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
சிறைத்துறை வட்டாரத்தில் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது “முத்து மனோ தாக்கப்பட்டபோது பகல் மணி 03.45. அந்த நேரத்தில் சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி. ஆகியோர் சிறை வளாகத்தில் இருந்தனர். ஆனாலும், கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காலகட்டத்தில், சிறைகளில் இதுபோன்ற கொலைகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
மத்திய சிறை ஒன்றில், பிசிபி கேன்டீன் நடத்த ஒரு மாத எக்ஸ்டென்ஷனுக்கு ரூபாய் 5 லட்சம் கமிஷன் வாங்கும் மேலதிகாரி இருக்கிறார். அதனால்தான், சிறையில் 25 ரூபாய் பீடி கட்டுக்கு ரூபாய் 100 விலை வைக்கிறார்கள். இந்த பி.சி.பி. வருமானம், பெட்ரோல் பங்க் வருமானம், கைதிகளுக்கு உணவுப்பொருள் வழங்குவதன் மூலம் கிடைக்கும் மோசடி வருமானம், ஆடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பில் கிடைக்கும் லாபம், கிளைச்சிறைகளில் வசூலிக்கப்படும் மாமூல், சிறை உற்பத்தி பொருட்களில் கொள்ளை, பணியாளர்களுக்கு மெமோ கொடுத்து அதனை கன்சிடர் செய்வதற்காகப் பெறப்படும் லஞ்சம் என அனைத்திலும் பணமே குறிக்கோள் என்று செயல்படும் அதிகாரிகள், கைதிகள் நலனைக் கருத்தில் கொள்ளாததாலேயே, சிறை வளாகத்தில் கொலைகள் நடக்கின்றன. அதே நேரத்தில், அதிகாரிகள் தப்புவதற்கு கடைநிலை ஊழியர்கள் பலியாக்கப்படுகின்றனர்.
பாளை. சிறையிலும்கூட, கைதி முத்து மனோவை ஒரு பிரிவினர் ஒன்றுசேர்ந்து அடித்தபோது, காவலர் ஒருவர் தடுத்திருக்கிறார். அப்போது, இன்னொரு பிரிவினர் ‘அவன் சாகட்டும்’ என்று அந்தக் காவலரைப் பிடித்து இழுத்து, கடமையைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அடித்த அடியில், சிறையிலேயே முத்து மனோ செத்துவிட்டார். ஆனாலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது இறந்தார் என்று ‘ரெக்கார்ட்’ செய்துள்ளனர்.
சென்னை புழல் சிறையில், கைதிகளான ‘பாக்ஸர்’ முரளி, வெல்டிங் குமார் போன்ற ரவுடிகள், இப்படித்தான் சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இங்கே பாளை. சிறையில் முத்து மனோ கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிறைகளில் கைதிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும். முறையான விசாரணையும் நடத்தப்பட வேண்டும்.” என்றனர் குமுறலாக.
குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் நோக்கமே, தண்டனை காலத்தில் தங்களின் தவறுகளை உணர்ந்து, மனம் திருந்தி, விடுதலையான பிறகு மறுவாழ்வு வாழத்தான்! சிறைகளிலோ, அடிதடியும் கொலைகளும் அல்லவா நடக்கின்றன!