திருநெல்வேலி பேட்டை உருவாக்கப்பட்டதற்கே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். டான்சி என்ற பெயரே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் என்பதாகும். சிறுதொழில் வளர்ச்சி கழகம், சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், தொழில் முதலீட்டு மையம், சிறுதொழில் சேவை நிறுவனம், மாநில தொழில் மேம்பாட்டு கழகம், சிறு தொழில் வர்த்தக கூட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை கழகம், சிறு, மற்றும் குறு தொழில் வளர்ச்சிக் கழகம் என்று பல பெயரிட்டு குறு மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதாக சொன்னார்கள்.
நாட்டின் தொழில் வளர்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக 1958- ஆம் ஆண்டு அன்றைய சென்னை ராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட தொழிற்பேட்டைகளில் மிக முக்கியமான இடத்தை பெற்றிருந்தது திருநெல்வேலி பேட்டை பகுதியிலுள்ள தொழிற்பேட்டை.
64 சிறு தொழில்களை மேம்பாடு செய்வதற்காக 668. 61 கோடி ரூபாயில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI) உருவாக்கப்பட்டது. இக்கழகத்தின் நோக்கம் பயிற்சி கொடுப்பது, பொருள்களை செயல்முறைப் படுத்துவது, 'அரசு ' என்று முத்திரை இட்டு விற்பனை செய்வது.
வேளாண்மை உற்பத்தி கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான தொழிற்சாலைகளும் இப்பேட்டையில் உருவாக்கப்பட்டன. தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பேட்டை இன்றைக்கு அவலத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.
சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கிறோம். அதற்காக நாட்டின் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பவர்கள் திருநெல்வேலி பேட்டையின் அவலத்தை நேரில் பார்க்க வேண்டும். படித்தோ, படிக்காமலோ வேலை செய்வதற்கு தயார் என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றைக்கு இருக்கின்றார்கள். இந்தியாவிலேயே மிகப் பிரதானமான வளர்ச்சிக்கு காரணியாக இருப்பவை சிறு குறு நடுத்தரத் தொழில்கள்.
தேசிய உற்பத்தியில் 8 சதவீதமும் மாநில உற்பத்தியில் 45 சதவீதமும் இத்தகைய தொழில்களே நிரப்புகின்றன. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடியது சிறு குறு தொழில்கள்.
தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் உருவாக காரணம் வேலையின்மையை போக்காததே என்று ரத்னவேல் பாண்டியன் விசாரணை கமிஷன் சொல்லி தொழில் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும் என்று வழிகாட்டியது.
தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை விட இருக்கும் தொழில்களும் மூடப்பட்டு இருப்பது வேதனைக்குரிய அடித்தளமாக இருக்கின்றது.
இங்கு உள்ள அலுவலகம் திறக்கப்படுவது அபூர்வமான ஒரு காட்சியாகும். வேளாண்மை உற்பத்திக் கருவிகளை தயாரிக்கும் ஆலையும் மூடப்பட்டிருக்கிறது. மாநில அரசுக்குச் சொந்தமான டான்சி நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கின்றது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூடியிருக்கும் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்குவதுடன், மூடப்பட்டிருக்கும் டான்சி மற்றும் வேளாண்மை இயந்திர உற்பத்தி ஆலைகளை இயக்க வேண்டும். அல்லது இளம் தொழில் முனைவோரிடம் இவற்றை கொடுத்து இயக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவைகளை இயக்குவதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய நிலைமை ஏற்படும். தமிழக அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.
- காசி விஸ்வநாதன்