கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், திட்டக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நெய்வேலியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் மற்றும் கடலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஜெயச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட நீதிபதி திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நீதியரசர்கள் பேசுகையில், "தமிழக அரசு நீதிமன்றம் திறப்பதற்கு பொருளாதார அடிப்படையில், பல்வேறு கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் செய்து வருகிறது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ள நிலையில் உடனுக்குடன் வழக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில், வழக்காடிகள் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்து நீதியரசர்கள் மூலம் தீர்வு காண வேண்டும். வழக்குகளை வாய்தா மூலம் தள்ளி வைப்பது என்பது மன வேதனையளிக்கிறது.
இதுபோல் புதிதாக நீதிமன்றங்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் திறக்கப்படும் போது பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளுக்காக நீதிமன்றத்தை மட்டும் நம்பி இல்லாமல் சமரச மையத்திற்கு சென்று தீர்வு காணுங்கள். உச்சநீதிமன்றத்தின் 13 மற்றும் 14 வது திட்ட கமிஷனில் கூறியது போல் ஒவ்வொரு தாலுக்காவிலும் நீதிமன்றம் திறக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 85 சதவீதம் நீதிமன்றங்கள் கட்டப்பட்டுவிட்டன.
ஒரு சில இடங்களில் மட்டும் தான் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. விரைவில் அனைத்து கட்டிடங்களும் அரசால் கட்டப்பட்டு விடும் என்று நீதித்துறைக்கு நம்பிக்கை உள்ளது. புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றங்களில் நல்ல முறையில் வழக்குகளை விசாரித்து, வெகு விரைவாக வழக்காடிகளுக்கு தீர்வு காணப்பட்டு மகிழ்ச்சியுடன் செல்வது தான், இந்நிகழ்ச்சிக்கான பலனாக இருக்கும். நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், நிர்வாகத்துறை அலுவலகர்கள் என அனைவரிடமும் வரும் வழக்குகளை விரைவாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் " என்றனர். இந்நிகழ்ச்சியில் திட்டக்குடி , விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.