கோவையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், கோவை மாநகராட்சியில் 4,000க்கும் மேற்பட்டோரும், மாவட்டம் முழுக்க 10,000க்கும் மேற்பட்டோரும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றிவருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், அரசு நிர்ணயித்துள்ள ஊதியம், ஊதிய உயர்வு உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களுடனான பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம், எட்டு மணி நேர வேலை, தூய்மைப் பணியில் மட்டும் ஈடுபடுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் வாபாஸ் பெறப்பட்டது. ஆனால், மற்ற தூய்மைப் பணியாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில், மாநகர ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சு வார்த்தையில், ‘தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து வருகின்ற மாமன்ற நாட்களில் மாமன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தற்போது போராட்டம் தொடர்பாக தூய்மைப்பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணைகள் விலக்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.